புதிய உலக சாதனை படைத்தார் ஸ்டீவ் ஸ்மித்

0
60

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக அதிக பிடியெடுப்புகளை எடுத்துவர் என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவர் இந்த மகத்தான சாதனையை படைத்துள்ளார். போட்டியின் முதல்நாள் ஆட்டத்தின் போது  இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக்கின் பிடியெடுப்பை எடுத்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஸ்மித் இதுவரை 62 பிடியெடுப்புகளை பிடித்துள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 61 பிடியெடுப்புகளை செய்திருந்த கிரெக் சாப்பலின் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.

இதனிடையே டெஸ்ட் போட்டிகளில் அதிக பிடியெடுப்புகளை பிடித்தவர் என்ற சாதனையை தன்வசப்படுத்தும் வாய்ப்பும் ஸ்மித்துக்கு கிட்டியுள்ளது. அவர் இதுவரை 121 போட்டிகளில் 206 பிடியெடுப்புகளை எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 213 பிடியெடுப்புகளுடன் முதலிடத்திலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் 210 பிடியெடுப்புகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இதேவேளை ஸ்டீவ் ஸ்மித் தனது வாழ்க்கையில் இதுவரை 120 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் அவர் 214 இன்னிங்ஸ்களில் 55.82 சராசரியுடன் 10,496 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 36 சதங்களும், 43 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களாக 239 ஓட்டங்களை ஸ்மித் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.