நேபாளத்திற்கு மீளவும் சேவையை ஆரம்பித்தது ஸ்ரீலங்கன் விமானம்

0
32

இலங்கை மற்றும் நேபாளத்திற்கு இடையிலான விமான சேவை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி இன்று காலை 8.45க்கு ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் UL-181 விமானம் காத்மண்டு நோக்கி பயணித்துள்ளதாக விமான நிறுவனத்தின் பெருநிறுவன தொடர்புத் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக சர்வதேச விமான நிலையம் நேற்று (10) மூடப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் காத்மாண்டுவிற்கு பயணிக்க நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் ஹோட்டல் வசதிகளை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் வழங்கியதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இன்று காலை மீளவும் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8.45க்கு விமானம் காத்மண்டு நோக்கி பயணித்துள்ளது.

இந்த விமானம் இன்று மதியம் 11.41 மணிக்கு நேபாளத்தின் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விமானம் இன்று பிற்பகல் 04.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தின் காத்மாண்டு சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்களை இயக்கும் ஒரே விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் என்றும் வாரத்தில் நான்கு நாட்கள் விமானங்கள் இயக்கப்படுவதாகவும் தீபால் பெரேரா மேலும் தெரிவித்தார்.