ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பாரியளவிலான விமானிகளுக்கான வெற்றிடங்கள் இருப்பதன் காரணமாக சர்வதேச நியமங்களை மீறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் சுமார் 80 விமானிகளுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக நேற்றைய தினம் (23.06.2023) குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவ்வாறான விமானிகள் பற்றாக்குறை காரணமாக கடந்த ஜூன் 18 முதல் 22 வரை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 13 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகல்
விமானிகளுக்கான பற்றாக்குறை மற்றும் விமானப் பயணிகளுக்கான வசதிக் குறைவுகள் என்று ஶ்ரீலங்கன் விமானசேவையை வேறு தரப்புக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் படிப்படியாக முன்னெடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
அதனையடுத்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அதனை ஆமோதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் எழுபது விமானிகள் அண்மையில் பதவி விலகல் செய்துள்ளனர். தற்போது 260க்கும் குறைவான விமானிகளே உள்ளனர்.
இந்த வருடம் இன்னும் பதினெட்டு பேர் ஶ்ரீலங்கன்ஸ் விமான சேவையில் இருந்து விலகி எமிரேட்ஸ் செல்கிறார்கள்.
நாட்டிற்கு 330 விமானிகள் தேவை. ஆனால் 260 பேர் மட்டுமே உள்ளனர். அதன் காரணமாக சர்வதேச சட்டங்களை மீறி விமானிகள் பணிபுரிய வேண்டும்.
விமானிகள் பற்றாக்குறை
விமானங்களில் தொடர்ச்சியாக பறப்பது மிகவும் கடினம்.

ஆனால் விமானிகள் பற்றாக்குறை காரணமாக இவர்கள் ஓய்வு காலத்தை குறைத்து இன்று வேலை செய்ய வேண்டியுள்ளது.
அப்போது பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே விமானிகளின் பிரச்சினையை அரசு தீர்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழுத்தமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
