உள்ளூர் முகவர்களினால் ஏமாற்றப்பட்டு உக்ரைன் – ரஷ்ய போர்க்களத்தில் தள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய படையில் கூலிப்படையாக செயற்பட்ட இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற வீரர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உள்ளூர் முகவர்களின் போலி வாக்குறுதிகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படையில் கூலிப்படையாக செயற்பட்ட தனது கசப்பான அனுபவங்களை கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தம்மை எப்படியாவது மீட்டு தாயகம் திரும்ப வழிசெய்யுமாறு இலங்கையை சேர்ந்த வீரர் ஒருவர் கண்ணீர் விட்டு கதறியழுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி உயிரிழந்துவிட்டதாகவும் பிள்ளையை பாடசாலைக்கு கூட அனுப்ப முடியவில்லை எனவும் அவர் உருக்கதுடன் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய இராணுவத்தில் கூடிய சம்பளம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு என்ற போலியான வாக்குறுதிகளால் ரஷ்யாவிற்கு அழைத்துவரப்படுகின்றார்கள்.
இராணுவத்தில் பணியாற்றப் போவதாகக் கூறப்பட்டாலும் வாக்னர் கூலிப்படையின் முன் வரிசையில் பணியாற்றச் சென்றதுதான் நடந்தது.
அதிக சம்பளம், ரஷ்யாவில் காணி மற்றும் குடியுரிமை பெற்றுத்தருவதாக உள்ளூர் முகவர்கள் கூறினார்கள். எனினும் அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
பல மாதங்களாக சம்பளம் கூட வழங்கப்படவில்லை. ஆகையினால் முகவர்களின் போலி வாக்குறுதிகளை நம்பி உக்ரைன் – ரஷ்ய போர்க்களத்திற்கு வரவேண்டாம்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ஏமாற்றிய இந்த மோசடியில் இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவர் உட்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை உக்ரைன் – ரஷ்ய போரில் பங்கெடுத்த பல இலங்கையர்கள் தற்போது உயிருடன் இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (02.05.2024) கருத்து தெரிவித்திருந்த அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். போர்க்களத்தில் கூலிப்படையாக செயற்பட்ட 40 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய – உக்ரைன் போரில் இணைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.