இங்கிலாந்து நாடாளுமன்றுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், நாடாளுமன்றில் பேசும்போது இலங்கையைச் சேர்ந்த தனது தமிழ் பெற்றோர்களின் போராட்டங்கள் குறித்து உணர்ச்சிவசப்பட்டார்.
அண்மையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை ஆற்றிய உமா குமரன், தனது பெற்றோரும் பிரிட்டனின் வெற்றிக் கதையின் ஒரு அங்கம்.
தான் தமிழ் அகதிகளின் மகள் என்றும், தவறான எண்ணம் மற்றும் துன்புறுத்தல்களை சகித்துக்கொள்வது எப்படி என்பதை அறிந்த ஒரு சமூகத்தின் குழந்தை என்றும் உமா குமரன் அந்த உரையில் கூறினார்.
தனது பெற்றோர் 40 ஆண்டுகளுக்கு முன்பு உயிரைக் காப்பாற்றிக் கொண்டு பிரிட்டனுக்கு வந்து, தற்போது இந் நாட்டின் குடிமக்களாக இருப்பது பெருமையாக உள்ளது என்றும் கூறினார்.
உமா குமரனின் பெற்றோர் இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக 1980-களில் அங்கிருந்து வெளியேறி லண்டனில் குடியேறியவர்கள்.
36 வயதான உமா குமரன், லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் அரசியல் சிறப்பு இளங்கலைப் பட்டப் படிப்பையும் பொதுக் கொள்கை முதுகலைப் பட்டப்படிப்பையும் கற்றுள்ளார்.
இங்கிலாந்தின் தேசிய சுகாதாரத்துறை ஊழியராக (NHS) தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய உமா இளவயதிலேயே லேபர் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.
கடந்த மே மாதம் புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ (Stratford and Bow) தொகுதியில் தொழிலாளர் கட்சியின் வேட்பாளராக குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.



