இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட உதவித் திட்டத்தின் கீழ் மதஸ்தலங்களில் சூரிய சக்தி அமைப்புகளை நிறுவும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.
இந்திய நிதி மானியத் திட்டத்தின் கீழ் மதஸ்தலங்களில் சூரிய சக்தி அமைப்புகளை நிறுவும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் இந்தத் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான பணிகளை ஆரம்பிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடல் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
புத்தசாசன மின்சக்தி அமைச்சுக்கள், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை சுனித்யா எரிசக்தி அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவும் கலந்துரையாடலில் கலந்துகொண்டது.
இந்திய நிதி அமைச்சரின் இலங்கை விஜயத்தில் ஒப்பந்தம் கைச்சாத்து
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இந்தியாவின் முதலீட்டில் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை அவர் ஆய்வு செய்திருந்தார்.
ஜனாதிபதிக்கும் இந்திய நிதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது, இலங்கையில் உள்ள மதஸ்தலங்களுக்கு சூரிய சக்தி அமைப்புகளை பொறுத்துவதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் திட்டத்திற்கான நிதியை இந்தியா மானிய அடிப்படையில் இலங்கைக்கு வழங்க உள்ளது. விரைவில் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.