பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கடந்த 2009-ம் ஆண்டு ‘எக்ஸ்’ தளத்தில் கமலா ஹாரிஸ் தொடர்பில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
குறித்த பதிவை பார்த்த பலரும், மல்லிகா ஷெராவத்திற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி இருக்கிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது 47 வயதாகும் நடிகை மல்லிகா ஷெராவத் பாலிவுட்டில் ‘மர்டர்’, ‘வெல்கம்’, ‘குரு’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ‘தசாவதாரம்’, ‘ஒஸ்தி’, ‘பாம்பாட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘பாலிடிக்ஸ் ஆப் லவ்’ என்ற ஆங்கில படத்தில் நடித்திருந்தார்.
குறித்த படத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் பிரசார ஊழியராக மல்லிகா ஷெராவத் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் கமலா ஹாரிஸை தழுவி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2009-ம் ஆண்டு மல்லிகா ஷெராவத், ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், “ஒருநாள் அமெரிக்காவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பை கொண்டவர் என்று சிலரால் கூறப்படும் கமலா ஹாரிஸ் என்ற பெண்ணுடன், ஆடம்பரமான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.