மத்திய கிழக்கு போரினால் ஹோமுஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, மக்களின் வாழ்க்கைச் செலவை பாரியளவில் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை (UNCTAD) எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 16 கப்பல்கள் உட்பட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிக் காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
உலகின் மொத்த எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படும் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில், ஈரான் தனது போர்க்கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளதாகக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர்க்கப்பல்களை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று (10) ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில், இந்தப் பாதிப்பு குறிப்பாக ஆசிய நாடுகளையும் வறிய மக்களையும் மிகக் கடுமையாகத் தாக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி போர் ஆரம்பித்தது முதல் ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 97 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச ரீதியில் மசகு எண்ணெயில் 38 சதவீதமும், எரிவாயுவில் 29 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 19 சதவீதமும் இந்த நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன.
தற்போது இது தடைப்பட்டுள்ளதால் எரிசக்தி விலைகள் (பெற்றோல், டீசல், எரிவாயு) அதிரடியாக அதிகரித்துள்ளன. சர்வதேச ரீதியில் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு (33%) இந்த நீரிணை ஊடாகவே விநியோகிக்கப்படுகிறது.
இது முடங்கியுள்ளதால் உலகளாவிய உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹோமுஸ் நீரிணை ஊடாக அனுப்பப்படும் மொத்தப் பொருட்களில் 84 சதவீதம் ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன.
இதனால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்காகப் பாரிய விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி குறிப்பிட்டுள்ளது



