செம்மணி படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தினால் தான் சாட்சியமளிக்க தயாராக உள்ளதாக கிருஷாந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனது மனைவி மூலம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு யுத்தகாலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் அங்கு நடாத்தப்பட்டு வந்த சித்திரவதைக் கூடங்கள் என்பன பற்றிய விபரங்களை வெளியிடுவதற்குத் தனது கணவர் தயாராக இருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சோமரத்ன ராஜபக்ஷ எழுதிய கடிதம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார்.

சோமரத்ன ராஜபக்ஷ எழுதிய கடிதம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை கிடைத்ததும் அது பற்றி கருத்துக் கூறுவதாகவும் நீதி அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதிக்கு இந்தக் கடிதம் கிடைத்ததாக என்னால் உறுதிப்படுத்த முடியாதுள்ளது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை சோமரத்ன ராஜபக்ஷவின் வெளிப்படுத்தல்கள் தமக்கு அதிஷ்டலாபச்சீட்டு விழுந்ததைப் போன்று இருப்பதாகவும் இச்சந்தர்ப்பத்தைத் நீதிகோரி போராடும் சகல தரப்பினரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி தெரிவித்துள்ளார்.