இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியில் ஒவ்வொரு நாளும் புதிய மனித எலும்புக்கூடுகள், குழந்தைகளின் எலும்புகள், உடைகள், வளையல்கள், பொம்மை உள்ளிட்ட பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் அகழ்வுப் பிரதேசம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மனித எலும்புகள் காணப்படலாம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தொடர்பில் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்ததை அடுத்து நேற்றுமுன்தினம் (ஜூன் 2) முதல் அந்த பகுதியிலும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக செம்மணி புதைகுழித் தொடர்பில் அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.
தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்த இடத்தில் துப்புரவுப் பணிகளை கடந்த ஜூன் 1ஆம் முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்களின் உதவியுடன் மேற்கொள்கின்றனர்.
நீதிமன்றத்தால் குற்றச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி, சித்துப்பாத்தி இந்து மயான மனித புதைகுழியில் இருந்து இன்றுவரை (ஜூன் 8) கண்டறியப்பட்டுள்ள 40 எலும்புக்கூடுகளில் குறைந்தது பத்து சிறுவர்களின் எலும்புக்கூடுகள் இருப்பதாக அகழ்வாய்வாளர்கள் கூறுகின்றனர்.
புதைகுழி அகழ்வாய்வாளர்களான பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோர் சிறுவர்களுடையது என நம்பப்படும் 2 எலும்புக்கூடுகளை இன்று கண்டறிந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் அகழ்வுப் பணியை மேற்பார்வை செய்யும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவிக்கின்றார்.