தேசிய ஊடகக் கொள்கை தொடர்பான கருத்தரங்குகள் – சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு

0
32

அநுர அரசாங்கம் தயரித்து வரும் தேசிய ஊடகக் கொள்கை தொடர்பாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பல ஊடக அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையி ஊடக அமைச்சு அந்த தேசிய கொள்கை தொடர்பான வரைபு (Zero Draft) பற்றி இலங்கைத்தீவின் பல மாவட்டங்களிலும் விளக்கமளித்து வருகின்றது.

ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மற்றும் கொல்லப்பட்ட – காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலளர்களின் உறவினர்களுக்கான நீதி விவகாரங்கள் தொடர்பில் உரிய பதில் வழங்காத ஒரு பின்னணியில், தேசிய ஊடகக் கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஏலவே குற்றம் சுமத்தியுள்ளது.

தமிழ் ஊடக அமைப்புகள் இந்த வரைபு தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கு பற்றியிருந்தாலும் உரிய முறையில் தேசிய ஊடக கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றும் உழைக்கும் பத்திகையாளர் சங்கம் அழைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் எனவும் யாழ் ஊடக அமையம் கோரியிருந்தது.

இந்த நிலையில் தேசிய ஊடக கொள்கை தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி வரும் ஊடக அமைச்சு, கிழக்கு மாகாணத்திலும் நடத்தியுள்ளது.

ஊடக அமைச்சினால் நியமிக்கப்பட்ட பன்முகக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தேசிய ஊடகக் கொள்கையின் வரைவு தொடர்பாக கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) ஒத்துழைப்புடன் கொழும்பில் உள்ள சுதந்திர ஊடக இயக்கம் இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

இக் கருத்தரங்கில் பங்குபற்றிய தமிழ் ஊடகவியலளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் பலர் வடக்கு கிழக்கில் தமிழ் ஊடகத்துறைக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றி எடுத்துக் கூறியிருந்தனர். தேசிய ஊடக கொள்கை தயாரிக்கப்படும்போது, தமிழ் ஊடகத்துறை தொடர்பான செய்ற்பாடுகள் பற்றிய விவகாரங்களில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட வேண்டிய முறைமைகள் பற்றியும் எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது.

அதேநேரம் அரசாங்கம் தயாரித்துள்ள தேசிய ஊடகக் கொள்கை பற்றிய வரைபு தொடர்பாக இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், மூத்த பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையை சேர்ந்த பலருடனும் உரையாடல்கள் நடத்தப்படும் எனவும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.