இலங்கையில் பிரசித்தி பெற்ற கதிர்காம ஆலயத்தின் பொறுப்பிலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெளிவுபடுத்தினார்.
மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். “சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கதிர்காம ஆலயத்திலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதி நீரில் சிக்கியது.
அவ்வாறு தங்கம் நீரில் சிக்கும் போது, ஏதேனும் ஒரு காரணத்தினால் அந்த தங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது? அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்தேன்.
இவ்வேளையில் அரசாங்கமும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஏனைய திட்டங்களுக்கு உதவவே நாம் எதிர்பார்த்தோம்.
மாறாக இது அரசாங்கத்துடனான ஒரு டீலோ அல்லது ஜனாதிபதியுடனான டீலோ அல்ல. அப்படி இல்லை. ஜனாதிபதி குறைந்தபட்சம் என்னிடம் இதிலிருந்து உதவி செய்யுமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை.
தங்கத்தை சரியான முறையில் விற்பனை செய்வேன், அதற்கான 100 வீத பொறுப்பை நான் ஏற்கிறேன். இந்தத் தங்கத்தை குறைந்த விலைக்கு விற்க இடமளிக்க மாட்டேன்.
100 வீதம் சரியான விலைக்கே விற்கப்படும். அது குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக நான் அறிவிப்பேன். விற்பனை விலை, விற்பனை செய்வதாயின், பௌத்த விவகார ஆணையாளரின் அனுமதியுடன் விற்பனை செய்வதாயின், அதனை 100 வீதம் வெளிப்படைத்தன்மையுடன் செய்ய நான் எதிர்பார்க்கிறேன்.
எந்த வகையிலும் மோசடி செய்ய நான் எதிர்பார்க்கவில்லை. நான் ஆலயத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக யாராவது கூறினால், கடந்த நான்கு வருடங்களிலும் எனக்கு கிடைக்கும் பாதுகாவலர் கொடுப்பனவையோ, எந்தவொரு ஊதியத்தையோ நான் விஷ்ணு ஆலயத்திலிருந்து இதுவரை பெறவில்லை.
நான் கதிர்காம ஆலயத்திலிருந்தும் பெறமாட்டேன் என கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க மேலும் தெரிவித்தார்.



