நாடாளுமன்றத்தை கலைத்து உடன் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பிரேரணைக்கு ஏனைய கட்சிகள் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அனைத்து கட்சிகளிடமும் கோரிக்கை

இந்த பிரேரணையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கையொப்பமிட ஆயத்தமாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கலைத்து பொது தேர்தல் ஒன்றை நடத்துவதனை வலியுறுத்தும் வகையில் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்கால தேர்தல்களில் வெற்றியீட்டும் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ சூளுரைத்திருந்தார் எனவும், அவருக்கு பொது தேர்தலை எதிர் நோக்குமாறு சவால் விடுவதாகவும் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
குழப்ப நிலையில் நாடாளுமன்றம்

நாடாளுமன்றம் குழப்ப நிலையில் காணப்படுவதாகவும், மக்களின் உண்மையான பிரதிநிதித்துவம் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே நாடாளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணையை மீண்டும் வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றைக் கலைக்குமாறு பிரேரணை கொண்டு வரப்படுமா என எழுப்பிய கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லை, அரசியல் மூலோபாயங்கள் முன்கூட்டியே வெளிப்படுத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.