சந்திராயன் விவகாரத்தை சஜித் கையில் எடுத்தது அவதூறு பரப்பவே; நாமல் குற்றச்சாட்டு

0
361

ரோஹித ராஜபக்ஷவின் பங்களிப்புடன் கடந்த காலங்களில் விண்ணில் ஏவப்பட்ட செய்மதிக்கான செலவுகள் தனியார் நிறுவனத்திலேயே செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இந்த செய்மதிக்கான செலவை மேற்கொண்டது ஒரு அரசு நிறுவனமாக இருந்தால் கோப் குழுவிடம் இது தொடர்பிலான தகவல்களை முன்வைக்க வேண்டும். ஆனால், தனியார் தொழில் நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளை கேள்விக்கு உட்படுத்த முடியாது.

இந்த முதலீடு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் உரிய தரப்பினரிடம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். அல்லது இது அரச முதலீடாக இருப்பின் குறித்த நிறுவனத்தை கோப் குழுவுக்கு அழைக்கலாம்.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துகள் அவதூறுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டவையாகும். இதுபோன்ற அவதூறுகளால் பொருளாதாரத்தை வளர்க்க முடியாது“ என்றும் கூறியுள்ளார்.

நிலவின் தென் துருவத்துக்கு இந்தியா அனுப்பிய சந்திரயான் விண்கலத்தின் பெறுமதி 75 மில்லியன் டொலர் எனவும், இலங்கையில் இருந்து ஏவப்பட்ட செய்மதிக்கு 320 மில்லியன் டொலர் செலவானதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.