பிரபல ஊடகத்தின் செய்தியாளர் விபத்தில் உயிரிழப்பு: ட்ரக் வண்டிச் சாரதி கைது

0
225

இந்தியாவின் பிரபல ஊடகமான டைம்ஸ் நௌவ்வைச் (Times Now) சேர்ந்த பிரபல மராத்தி ஊடகவியலாளர், ஹர்ஷால் பட்டேல் வீதி விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார். அந்த செய்தியானது இந்திய ஊடகங்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த விபத்தானது ஊடகவியலாளரின் கார் எதிரே வந்த டிரக் ரக வாகனத்தில் மோதுண்டமையினாலே சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த ஹர்ஷால் பட்டேல் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், டிரக் வண்டியின் சாரதி அதிகவேகமாக டிரக்கை செலுத்தி வந்தாகவும் இதனால் டிரக்கில் மோதிய கார் சுமார் அரை கிலோமீற்றர் வரை இழுத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது அருகில் இருந்தவர்கள், சாரதியை மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு, சாரதியை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.