உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பது கடினம்: அமெரிக்க கடலோர காவல்படை அறிக்கை

0
368

டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளை ஆய்வு செய்வதற்காக சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறி அதில் இருந்த ஐந்து பயணிகளும் உயிரிழந்ததை அமெரிக்க கடலோர காவல்படை உறுதி செய்துள்ளது.

எனினும் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்டுபிடிப்பது கடினம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐந்து பயணிகளுடன் சிறிய அளவிலான டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் கிழக்கு கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் துறைமுகத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தைத் தொடங்கியது.

அட்லாண்டிக் பெருங்கடலில் 3,800 மீட்டர் ஆழத்தில் இருக்கும் டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை ஆராய்வதே இந்தக் குழுவின் நோக்கமாக இருந்தது.

எனினும் நீர்மூழ்கிக் கப்பல் பயணித்த ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து எட்டு மணி நேரத்திற்கு பின்னரே கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு அமெரிக்க, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் மற்றும் விமானங்கள் உதவியுடன் நீர்மூழ்கிக் கப்பலை கண்டுபிடிக்க நான்கு நாட்களாக பெரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்காக, தொலைதூரத்தில் இயக்கக்கூடிய சிறிய கப்பல்கள் மற்றும் ரோபோக்கள் கூட பயன்படுத்தப்பட்டன.

டைட்டனில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் தீர்ந்துபோவதற்குள் அதைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை இருந்தமையின் காரணமாகவே தீவிர தேடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், கடற்பரப்பில் டைட்டானிக் கப்பலுக்கு அருகில் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை நேற்று இரவு அறிவித்தது.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலுக்குச் சொந்தமான தரையிறங்கும் சட்டமும் மற்ற ஐந்து பாகங்களும் இடிபாடுகளுக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பயணிகளை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் நிறுத்தப்பட்டன.

அதன்பிறகு, அமெரிக்க கடலோர காவல்படையும் மற்றும் கப்பலின் தாய் நிறுவனமான ஓஷன் கேட் நிறுவனமும் நீர்மூழ்கி கப்பல் விபத்துக்குள்ளானதை உறுதிசெய்தது.

இதன் விளைவாக அதில் இருந்த ஐந்து பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தேடுதல் பணி தொடங்குவதற்கு முன்பே கப்பல் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

டைட்டன் காணாமல் போன அன்று அமெரிக்க கடற்படை வெடிப்பு சத்தம் கேட்டதாக தெரிவித்திருந்தது. ஆனால் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்ததற்கான சரியான நேரமோ காரணமோ இதுவரை தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

உயிரிழந்தவர்களின் உடல்கள் கிடைக்குமா கிடைக்காதா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்றும் அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலின் உரிமையாளரான Oceangate இன் தலைமை செயல் அதிகாரி ஸ்டோல்டன் ரஷ், பிரித்தானிய கோடீஸ்வர தொழிலதிபர் ஹர்மிஷ் ஹார்டிங், பிரெஞ்சு ஆய்வாளர் பால் ஹென்றி நஜோலெட் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷெஹ்சாதா மற்றும் சுலைமான் தாவூத் ஆகியோர் டைட்டன் படகில் பயணம் செய்தனர்.

அவர்களின் திடீர் மரணத்திற்கு வெள்ளை மாளிகையும் இரங்கல் தெரிவித்துள்ளது.

டைட்டனைத் தேடும் பணியில் ஒன்பது கடற்படைக் கப்பல்கள் மற்றும் பல இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் பணியை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

எவ்வாறாயினும் இடிபாடுகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடரும் என அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி: