சீனா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று தைவான் ராணுவம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
தைவான் எல்லைக்கு அருகே சீனா அதிநவீன ஏவுகணையை ஏவி போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை ஜப்பான் மற்றும் உலக நாடுகளால் கடும் விமர்சனத்துற்கு உள்ளாகி வருகிறது.
போர் ஒத்திகையை உடனே கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஜப்பான் பிரதமர் முன்வைத்துள்ளார். இதனிடையே 7ம் திகதி வரையில் தீவிர போர் ஒத்திகை முன்னெடுப்போம் என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

தைவானின் 6 எல்லைப் பகுதிகளையும் சீனாவின் முப்படைகளும் சுற்றி வளைத்துள்ளன. சீன போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் தயார் நிலையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் போர் ஒத்திகையால் தைவானில் நேற்று 50 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் தைவான் ராணுவத்தின் மூத்த தலைவர் ஷி யீ தெரிவிக்கையில் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகள் மூலம் சீன ராணுவம் போர் ஒத்திகை நடத்தி வருகிறது.

சீனாவின் ஒவ்வொரு நகர்வையும் மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் சீனா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சீனாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் வடகொரியாவும் குரல் எழுப்பி வருகின்றன. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஓரணியில் திரண்டன.

தற்போது தைவான் விவகாரத்தால் 3-ம் உலகப்போருக்கான ஆபத்து அதிகரித்து வருகிறது என்றே நிபுணர்கள் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
