உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியான ஜனாதிபதி தேர்தலை நடத்தும் சந்தர்ப்பத்தை வழங்க முடியும்.
மக்கள் ஆணையில்லாத தலைவராக சட்டவிரோதமான முறையில் நாட்டை ஆட்சி செய்து வருகிறார். நாடு மிகப் பெரியளவில் பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் அராஜக நிலைமையை நோக்கி பயணித்து வருகின்றது. ஜனாதிபதி தனது அழகான கதைகள் மூலம் கட்டியெழுப்பும் பொருளாதாரம் மக்களுக்கு தீயாக மாறி வருகிறது.
மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. தொழிசார் நிபுணர்கள் தொகை,தொகையாக நாட்டை கைவிட்டு செல்கின்றனர்.
நிர்மாணத்துறை முற்றாக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு வந்து 14 மாதங்கள் கடந்துள்ளது. இதனால், அவர் தொடர்ந்தும் நாட்டையும் மக்களையும் அதளபாதாளத்திற்குள் கொண்டு செல்லாது, மக்கள் ஆணை என்ற உரிமையை தடுக்காது, உடனடியாக புதிய ஆட்சியை ஏற்படுத்த சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இதற்காக உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வர தயார் என்றால், ஜனாதிபதி தேர்தல் நடைமுறை காலவரையறையுடன் அதனை கொண்டு வர வேண்டும். அப்போது அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு முடிச்சுகளை போட்டு, ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தால், ஜனாதிபதி தேர்தலை பெற்றுக்கொள்ள நாங்கள் தயார் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.