சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள ரணிலின் செயற்பாடு

0
305

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தம்மிடம் கேள்வி கேட்டவரை கேலி செய்தமையானது சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

முக்கிய கேள்விக்கு பதில்

‘உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியாவிட்டால் தமிழில் பேசுங்கள், எனக்கு தமிழ் புரியும்’ என்று அவர் அண்மையில் பிரான்ஸில் வைத்து கூறியதன் மூலம் முக்கிய கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்க்கிறார் என்று ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இனப்படுகொலை, இராணுவமயமாக்கல், நில அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் போன்ற வடக்கில் நடக்கும் சம்பவங்களை நிறுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி யோகலிங்கம் அண்மையில் ரணில் விக்ரமசிங்க பங்கேற்ற நிகழ்வில் வைத்து கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும் இந்த கேள்விக்கான பதிலை தவிர்த்த ரணில் விக்ரமசிங்க, ஆங்கிலத்தில் பேச முடியாவிட்டால், தமிழில் பேசுமாறும், தமக்கு தமிழ் தெரியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இடைநிறுத்தப்பட்ட கேள்வி

இந்த நிலையில் குறித்த நிகழ்விற்கு தலைமை ஏற்றிருந்த ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர் தோமஸ் ஹெய்ல்மேன், யோகலிங்கத்தின் கேள்வியை இடைநிறுத்தினார்.

ரணிலின் இந்த செயலானது ‘ஜனாதிபதி என்ற பதவிக்கு அவர் தகுதியற்றவர்’ என்பதை காட்டுவதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ரணிலுக்கு தமிழ் புரியும் என்றால் தமிழர்களின் பிரச்சினைகளை ஏன் இதுவரை புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.