ரணில் வாரம், ஐஸ் வாரம் முடிவடைந்து தற்போது வசீம் தாஜூதின் வாரம் ஆரம்பம் – நாமல்

0
23

‘வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடகப் பிரிவு புதிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (01) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “ராஜபக்ஷக்கள் பற்றி இந்த அரசாங்கமும், நல்லாட்சி அரசாங்கமும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட பொய்களை உண்மையாக்குவதற்கு முயற்சித்தார்கள்.

வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் நாராஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை கைது செய்து போலியான வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கும் கடந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் முயற்சித்தார்கள். அந்த அதிகாரிகள்தான் இந்த அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள்.

முன்னாள் கடற்படைத் தளபதி கைது விவகாரத்தில் போலியான வாக்குமூலம் வழங்குவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றம் சென்றுள்ளார்.

ஒரு சில அதிகாரிகள் போலியான சாட்சியங்களை திரட்டி அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள். வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு விடயங்களை குறிப்பிடுகின்றார்.

இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிக்கையிட வேண்டுமே தவிர ஊடகங்களுக்கு குறிப்பிடக்கூடாது. அரசியல் பேசுபொருளுக்காகவே இந்த விடயம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இந்த விடயத்துடன் தொடர்புடைய சி.சி.டி காணொளியில் இடுப்பில் கை வைத்துக் கொண்டிருப்பவர் தனது கணவர் என்று அவரது மனைவி குறிப்பிட்டதாக பொலிஸார் குறிப்பிடுகிறார்.

அந்த நபர் கடந்த காலங்களில் யாருடன் இருந்தார், யாருக்காக செயற்பட்டார் என்பதை பொலிஸார் விசாரிக்க வேண்டும். வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.

ரணில் வாரம், ஐஸ் வாரம் முடிவடைந்து விட்டது. தற்போது வசீம் தாஜூதின் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்கள் எவ்வாறானதாக இருக்கும் என்று தெரியவில்லை.

அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடங்களுக்கு பொய்யான விடயங்களை குறிப்பிடுவதும், நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தகவல்களை குறிப்பிட்டால் அவருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.