இலங்கையர்கள் அனைவருக்கும் ‘Starlink’ செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, விரைவில் எலோன் மஸ்க்கை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் டிஜிட்டல் துறைக்கான மேலதிக வாய்ப்புகளை ஆராய இந்த சந்திப்பு நம்பிக்கை அளிக்கும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற 10ஆவது ‘உலக நீர் உச்சி மாநாட்டில்’ கலந்து கொண்டபோது ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை சந்தித்தார்.
இது இலங்கைக்கு ‘Starlink’ செயற்கைக்கோள் இணைய சேவையைப் பெறுவதற்கான செயல்முறையின் தொடக்கமாகும். உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது ‘எக்ஸ்’ கணக்கில் பதிவிட்டுள்ள செய்தியில், ‘Starlink’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்குவதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 2024 ஆம் ஆண்டு ‘Starlink’ நிறுவனத்திற்கு தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் உரிமத்தை வழங்கியது. ‘Starlink’ இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள Fibre தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமானது.