ஜனாதிபதி அனைத்து மக்களையும் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வேறுபாடுகளின்றி இலங்கையர்கள் என்ற நோக்குடனே தான் பார்க்கின்றார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
டி.எஸ்.சேனநாயக்க கட்சியை ஆரம்பிக்கின்ற போது இருந்த கொள்கைகள் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காலத்திலும் வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றத்திற்கோர் ஆரம்பம் எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கான கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பங்கேற்புடன் களுதாவளையில் நேற்று (22.06.2023) நடைபெற்றது.
இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினை
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 1942 ஆம் ஆண்டிலே ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்தது எல்லா இனங்களும் இலங்கையர்களாக இருக்க வேண்டும் என்பற்காகவே தான்.
காலம் கடந்த பின்னர் இந்நாட்டிலுள்ள மக்கள் பல பிரிவினர்களாக இருந்து பல கட்சிகளை ஆரம்பித்தார்கள். பின்னர் மக்கள் பல குழுக்களாக இணைந்தார்கள்.

1942 இல் மக்களிடத்திலே இருந்த இலங்கையர்கள் என்ற உணர்வு பின்னர் பிரிவினைகளாகியது. இந்த பிரிவினைகளை ஏற்படுத்தியதும் அரசியல்வாதிகளே தான்.
இதனால் நாடு 75 வருடங்களாக பின்னோக்கிச் செல்வதை எதிர்நோக்க நேரிட்டது. சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் இனங்களாகவும் மதங்களாகவும் அரசியலிலே பேதத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.
இதனால் அரசியல்வாதிகள் பலம் வாய்ந்தவர்களாகவும் மக்கள் தாழ்ந்தவர்களாகவும் ஏற்பட்டு விட்டன. இன்னும் 25 வருடங்களாகின்ற போது நாடு சுதந்திரம் பெற்று நூறு வருடங்களாகும்.

ஒன்றிணைந்து செயற்படல்
இனிமேலும் பிரிவினவாதங்களோடு வாழ்வதா அல்லது ஒரே நாடு என்ற நோக்குடன் வாழ்வதா என சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே எமது சுதந்திரமடைந்து நூற்றாண்டை கொண்டாடுகின்ற போது எமது நாடு முன்னேறிய நாடாக மாறவேண்டும் என்பதுதான் எமது நோக்கமாகும்.
நாட்டிலே பல பிரச்சனைகள் இருந்த போதும் அதனை முகம் கொடுத்தது ரணில் விக்ரமசிங்க மாத்திரமே தான். நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்த ஒரே ஒரு தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரம் தான்.
எனவே அனைவரும் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து செயற்படல் வேண்டும். எமது தலைவர் இந்த நாட்டை வங்குரோத்து அடைந்த நாடாகத்தான் பாரமெடுத்தார்.

நாடாளுமன்றத் தேர்தல்
அடுத்து வரும் வருடங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது, அதிலே தேவநாயகம் போன்றவர்கள் கடந்த காலத்தில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டது போல் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து எமது கட்சி சார்பாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படல் வேண்டும்.
அவ்வாறு நடைபெற்றால்தான் நாம் அனைவரும் இலங்கையர் என்ற உணர்வுடன் வேலை செய்ய முடியும். என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதில் கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பல்வேறு கோரிக்கைகளையும் கட்சியின் பொதுச் செயலாளரிடம் நேரில் கையளித்ததுடன், கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட சிலரும் இதன்போது நினைவுச் சின்னம் வழங்கி பொதுச் செயலாளரினால் கௌரவிக்கப்பட்டனர்.

