முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனக்குக் கிடைத்த 69 இலட்ச நம்பிக்கைகளை புறக்கணித்து விட்டு, கிரீடத்தை ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்திய பின்னர் ரணிலிடமிருந்து கிரீடத்தை பொறுப்பேற்க சிலர் காத்திருக்கின்றனர். எனினும் பொறுப்பேற்க நாடொன்றை மிச்சம் வைக்காமலேயே ரணில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலில் நரி
நான்கு தசாப்தத்திற்கும் மேற்பட்ட தனது அரசியல் வாழ்க்கையில் என்றுமே இல்லாத ஒரு தோல்வியை 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார்.
2022ஆம் ஆண்டு அப்போது நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களுக்கு எதிராக பொது மக்கள் ஒன்று திரண்ட அந்த சந்தர்ப்பத்தை தனக்காக பயன்படுத்திக்கொண்டார் ரணில்.
தன்னுடைய இராஜதந்திரங்களால் ‘அரசியலில் நரி’ என்ற பெயரைப் பெற்றவர். ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தைக் கொண்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினராகி, அதனைத் தொடர்ந்து பிரதமராகி அடுத்த ஒரே மாதத்தில் ஜனாதிபதியும் ஆனார்.
பொருளாதார நகர்வு
ரணில் எந்த அளவுக்கு சிறந்த இராஜதந்திரியோ, சிறந்த அரசியல்வாதியோ அந்த அளவுக்கு பொருளாதார ரீதியான நகர்வுகளை மேற்கொள்வதில் புத்திசாலி.
இவ்வாறான பின்னணியில், இம்முறை நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக பேசப்பட்டு வருகின்றன.
ராஜபக்ச தலைமையிலான மொட்டுக்கட்சியினர் மீது நம்பிக்கையை இலங்கை வாழ் மக்கள் இழந்துள்ளார்கள் என்ற பேச்சுக்கு மே தின நிகழ்வு முற்றுப்புள்ளி வைத்தது.
ராஜபக்சர்களின் நிலை
ரணிலைக் கொண்டு தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முயற்சித்த ராஜபக்சவினர், அதனை ரணிலிடமே தாரைவார்த்து விட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இறுதியில் ராஜபக்சவினரின் ஆட்சிக்கும், இலங்கை மக்களுக்கும் நடந்த போராட்டத்தில் ரணில் சாமர்த்தியமாக காய்நகர்த்தினார். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ரணிலின் ஒவ்வொரு அசைவுகளுக்கு பின்னாலும் ஏதோ ஒரு அரசியல் வியூகம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதனை புரிந்துக் கொண்டே விமல் வீரவன்ச இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் நிலைப்பாடு.
எவ்வாறாயினும் தனது பல தசாப்த கால அரசியல் வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் தலைமைப் பதவியை ஒரு இக்கட்டான நிலையில் ரணில் ஏற்றார் என்பது வெளிப்படையானதொரு உண்மை.