ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்றார் ரணில்: சற்று முன்னர் கட்டுப்பணமும் செலுத்தப்பட்டது

0
99

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா பிணைப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளார்.

ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (26) காலை அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தில் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று காலை அறிவித்திருந்தது.

இதன்படி, எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் எனவும் இன்று காலை முதல் ஓகஸ்ட் 14ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றினால் பெயர் குறித்து நியமனம் செய்யப்பட்ட வேட்பாளராயின் 50 ஆயிரம் ரூபாகவும், வேறொரு அரசியல் கட்சியினால் அல்லது வாக்காளர் ஒருவரினால் பெயர் குறித்து நியமனம் செய்யப்பட்ட வேட்பாளராயின் 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக வைப்பிலிடப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி ஜனாதிபதி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா இந்த கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.