இந்தியாவில் தம்பியின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலின் ஒரு பகுதியை சகோதரி தானமாக கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரத்துவத்தை கொண்டாடும் ரக்ஷா பந்தன் இந்தியாவில் பல இடங்களில் வாரம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நவி மும்பையை சேர்ந்த 21 வயதான இளம்பெண்ணொருவர் தம்பிக்கு தனது கல்லீரலை தானமாக கொடுத்து சகோதரத்துவத்தை பெருமைப்படுத்தியுள்ளார்.
17 வயதான ராகுல் என்பவர் அண்மையில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் மருத்துவரிடம் காட்டியுள்ளனர்.
மருத்துவ பரிசோதனையில் ராகுலுக்கு ஆட்டோ இம்யூன் லிவர் சிரோசிஸ் இருந்ததால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவது தெரியவந்தது.

இந்த நிலையில் ராகுலின் சகோதரியான 21 வயது நந்தினி தனது தம்பிக்காக கல்லீரல் தானம் கொடுக்க முன் வைத்தார்.
அவரின் கல்லீரல் ராகுலுக்கு சரியாக பொருந்திய நிலையில் அதன் ஒரு பகுதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
சிகிச்சைக்கு பிறகு இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
”என் சகோதரன் தான் எனக்கு உலகம். ரக்க்ஷா பந்தன் அன்று அவனுக்கு ஒரு மதிப்புமிக்க பரிசை வழங்கியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
பல மாதங்களாக அவனது உடல்நிலை குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் கவலைப்பட்டோம்.
இப்போது ராகுலின் கனவுகள் நிறைவேறக்கூடிய வகையில் அவனுக்கு இரண்டாவது வாழ்க்கை கொடுத்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.



