2015 ஆம் ஆண்டு ஊழல் மோசடியில் ஈடுபட்டதனால் ராஜபக்சக்கள் (Rajapaksas)தோல்வியைத் தழுவினர் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
வீரகெட்டிய (Weeraketiya) பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் “மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.
ஊழல் மோசடியில் ஈடுபட்டதன் காரணமாக 2015 ஆம் ஆண்டு ராஜபக்சக்கள் தோல்வியைத் தழுவினர். குடும்ப ஆட்சி மற்றும் மக்களுக்குச் சுமையான அபிவிருத்திகளை முன்னெடுத்தமையும் அவர்களின் தோல்விக்குக் காரணமானது.

இலங்கை தேயிலையில் 28 சதவீதமானவை முடிவுப் பொருளாகவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோட்டாபயவின் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட உரப் பிரச்சினை காரணமாகச் சிறு தேயிலைத் தோட்டத் தொழிற்துறை வீழ்ச்சியடைந்தது.
இன்று உணவுகளையும் கற்றல் உபகரணங்களையும் கொள்வனவு செய்ய முடியாத அளவுக்கு மக்கள் சுமைகளை எதிர்கொண்டுள்ளனர்.
மத்திய வங்கி மீது தாக்குதல் நடத்தியவர்கள், மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றவர்கள், நாடாளுமன்ற சொத்துக்களைச் சேதப்படுத்தியவர்கள் மற்றும் வரிமோசடி செய்தவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
இவ்வாறான ஒரு குழுவினரை வைத்துக் கொண்டு ஒருபோதும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. பழைய ஊழல் மற்றும் மோசடி அரசியல் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளது.” என அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
