வரவு செலவு திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதேவேளை, 25 நாட்கள் வேலைக்குச் சென்றால் மாத்திரமே இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படுமென்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவு திட்ட ஐந்தாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டின் வரவு செலவு திட்டம் நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். அந்தவகையில் வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதியின் அறிவிப்பு பெருந்தோட் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அரசாங்கம் ஒன்றின் வரவு செலவு திட்டம் மூலம் பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். அதனால் ஜனாதிபதிக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் அக்கறையும் அனுதாபமும் காட்டுவதை காணக்கூடியதாக இருக்கிறது. இந்த அனுதாபத்தை நிறைவேற்ற வேண்டும். அதனால் இந்த சம்பள அதிகரிப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்.
பெருந்தோட்ட மக்களுக்கு சம்பள அதிகரிப்பாக கம்பனிகளிடமிருந்து 200 ரூபாவும் அரசாங்கத்திடமிருந்து 200 ரூபாவும் வழங்குவதாக ஜனாதிபதி வாக்குறுயளித்திருக்கின்றார். அரசாங்கம் வழங்கத் தீர்மானித்த 200 ரூபாவுக்கு நாம் எமது பூரண ஆதரவை வழங்குவோம்.
எமது மக்களுக்கு ஏதாவது கிடைப்பதற்கு யாராவது எதிர்ப்பு என்றால், அதற்கு நாம் இணங்கமாட்டோம். சிலவேளை நாங்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவும் இடமிருக்கிறது. அது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.



