பானிப் பூரிக்காக நடுரோட்டில் அமர்ந்து போராட்டம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

0
27

இந்தியாவில் பலரும் விரும்பி சாப்பிடும் சாலையோர உணவுகளில் பானிப்பூரியும் ஒன்றாகும். பாமர மக்கள் முதல் பணக்காரர்களும் விரும்பி சாப்பிடும் உணவாக பாணிப்பூரி உள்ளது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் வடோதராவில், ஒரு பெண் நடுரோட்டில் அமர்ந்துபல மணி நேரம் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடோதராவின் சுர்சாகர் ஏரி பகுதியில் ஒரு பெண் பானிபூரி கடைக்கு சென்றுள்ளார்.

ரூ.20-க்கு வழக்கமாக ஆறு பூரி வழங்கப்படும் என எதிர்பார்ப்புடன் இருந்த அவருக்கு கடைக்காரர் நான்கு பூரிகளை மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தனக்கு குறைந்த அளவு பூரி வழங்கப்பட்டதை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். கூடுதலாக இரண்டு பூரிகள் கிடைக்கும் வரை அங்கிருந்து நகர மறுத்துவிட்டார்.

இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. தகவலறிந்து போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

அப்போது அந்தப் பெண் போலீஸாரிடம் “ரூ.20-க்கு ஆறு பூரிதான் சரியான விலை. அதை வாங்கி தாருங்கள்” என்று அழுதுகொண்டே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இறுதியாக போலீஸார் அந்த பெண்ணை சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது. எனினும் அந்த பெண்ணுக்கு கூடுதலாக இரண்டு பூரிகள் கிடைத்தனவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.