ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து உள்ளூராட்சி தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய

0
86

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமை தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களின் வெற்றி என உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேர்தலை தாமதப்படுத்துவது தவறு என்றும், இந்த உண்மையை நீதிமன்றம் ஒப்புக்கொண்டது நீதியை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும். தேர்தலை ஒத்திவைப்பது அல்லது நடத்தத் தவறுவது மக்களின் உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்த தீர்ப்பு ஆச்சரியப்படுவதற்கில்லை. தாமதமானாலும் இறுதியாக நீதி வழங்கப்படுவதாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.

அதன்படி, ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்த பின்னர் இந்த வருடம் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்குமென நம்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.