2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பாதீடு தொடர்பான முதலாவது பலப்பரீட்சையை ஜனாதிபதி அனுர தலைமயிலான தேசிய மக்கள் சக்தி நாளை (14) எதிர்கொள்கின்றது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை மாலை இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த 7 ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்தார்.
இந்நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 8 ஆம் திகதி ஆரம்பமானது. நாளை 14 ஆம் திகதி வரை விவாதம் நடைபெறும். நாளை மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இதன்போது எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் இன்று நடைபெறவுள்ளன.
அதேவேளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்கும் எனத் தெரியவருகின்றது.
தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது நிலைப்பாட்டை இன்று அறிவிக்கவுள்ளன. பாதீட்டை நிறைவேற்றிக் கொள்வதற்குரிய பெரும்பான்மைப் பலம் தன்வசம் உள்ள போதிலும், எதிரணிகளும் வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
அதேவேளை, அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதம் நாளைமறுதினம் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மேலும் பாதீடு மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி நடைபெறும்.



