கலவானை பொலிஸ் பிரிவில் கர்ப்பிணி இளம் மனைவியும் காதலனும் பெண்ணின் கணவனிடம் சுமார் 50 இலட்சம் ரூபாவைக் கப்பமாகக் கேட்டு தொல்லை கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கர்ப்பிணிப் பெண்ணொருவர் சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்த நிலையில், கலவான கோவிந்தபுரத்தில் கடந்த 12 ஆம் திகதி பொலிஸார் பெண்னை கண்டுபிடித்தனர்.
கர்ப்பிணி பெண், மாதாந்தக் கிளினிக்குக்குச் செல்வதாகக் கூறிவிட்டு 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டுச் சென்றிருந்தார். எனினும் அன்றைய தினம் தனது மனைவி வீட்டுக்குத் திரும்பவில்லை என அவருடைய கணவன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், பெண்ணை விடுவிக்க வேண்டுமாயின் 50 இலட்சம் ரூபா பணத்தைக் கொடுக்க வேண்டும் என இனந்தெரியாத தொலைபேசி அழைப்பொன்று கணவனின் அலைபேசிக்கு வந்துள்ளதுடன் வட்ஸ்அப் இற்கும் குறுந்தகவல் போடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 31 வயதான பெண்ணையும் அவருடைய காதலன் என அறியப்பட்ட 21 வயதான இளைஞரையும் கைது செய்தனர்.
சம்பவத்தில் 31 வயது மனைவியும், 21 வயது காதலனுமே பொலிஸாரிடம் வசமாகச் சிக்கினர். பெண்ணும் காதலனும் இணையத்தளத்தின் ஊடாக 5 மாதங்களுக்கு முன்னர் தொடர்பில் இருந்த இவ்விருவரும் பின்னர் காதலர்களாக மாறிவிட்டனர்.

காதல் வலையில் விழுந்த பெண்ணை, சியம்பலாண்டுவ நகருக்கு வரவழைத்த காதலன், பெண்ணைக் கலவான – வெத்தேகொட பகுதியிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்தே கணவனிடமிருந்து கப்பம் பெறுவதற்கான அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். விசாரணைகளின் பிரகாரம் இவ்விருவரையும் கைது செய்த பொலிஸார், இளைஞரை சியம்பலாண்டுவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் நாளை 18 ஆம் திகதி வரையிலும் மேற்படி நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை கர்ப்பிணியான அந்தப் பெண் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.