LGBTQ சமூகத்தைச் சேர்ந்த நபரின் ஆத்மா சாந்தியடைய பிரார்தனை: கல்கந்தே தம்மானந்த தேரரின் பங்கேற்பில் போதனை

0
83

இலங்கையில் LGBTQ சமூகத்தைச் சேர்ந்த உயிரிழந்த நபர் ஒருவருக்கு பௌத்த சமய முறைப்படி ஏழாவது நாள் தான கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

உயிரிழந்த நபர் LGBTQ சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஆவார். அவர் பிறக்கும் போது ஆண் பிள்ளையாக பிறந்து அதன் பின்னர் பெண்ணாக மாறியுள்ளார்.

அவர் உயிரிழக்கும் போது அவருக்கு வயது 31. தற்கொலை செய்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இவரின் உடலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.

அவரின் இறுதிக்கிரியைகள் LGBTQ சமூகத்தினர் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் உயிரிழந்து ஏழு நாட்களின் பின்னர் மத முறைப்படி வழங்க வேண்டிய தான நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

அந்த கிரியைகளின் போது போதனையை கல்கந்தே தம்மானந்த தேரர் நடத்தியுள்ளார். போதனையின் கருப்பொருளாக ‘அடையாளம்‘ எனும் தலைப்பு பேசப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்கந்தே தம்மானந்த தேரர் தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை பதிவு செய்துள்ளார். ‘எந்த அடையாளமும் நிலையானது அல்ல, அடையாளம் என்பது காரணங்களின் விளைவு மட்டுமே என்று அடிப்படையில் எழுப்பப்பட்டது.

மேலும் காரணங்களால் உருவான அடையாளம், காரணங்களின் மாற்றத்துடன் மாறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி எந்தவொரு அடையாளமும் பல்வேறு காரணங்களின் கலவையிலிருந்து எழுகிறது மற்றும் எந்தவொரு சக்தியின் சிறப்புத் தலையீட்டால் ஏற்படாது என்பதால் எந்த அடையாளமும் மற்றொரு அடையாளத்தை விட உயர்ந்தது அல்லது தாழ்ந்தது அல்ல என்றும் போதிக்கப்பட்டது‘ என அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.