துபாயில் நடைபெறும் COP28 காலநிலை மாநாட்டிற்கான தனது பயணத்தை போப் பிரான்சிஸ் இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் காய்ச்சல் மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் இவ்வாறு துபாய்க்கான பயணத்தை இரத்து செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 86 வயதான போப் பிரான்சிஸ், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.
கடந்த வார இறுதியில் போப் உடல்நலக்குறைவு இருந்தபோதிலும் திட்டமிட்டபடி துபாய் பயணத்தில் கலந்து கொள்வார் என்று வத்திக்கான் முன்பு கூறியிருந்தது.
“இந்த பயணத்திற்கு செல்ல வேண்டாம்“ என அவரது மருத்துவர்கள் வற்புறுத்தியதை அடுத்து, போப் மிகுந்த வருத்தத்துடன் பயணத்தை இரத்து செய்ய ஒப்புக்கொண்டதாக வத்திக்கான் கூறுகிறது. போப் பிரான்சிஸுக்கு இந்த ஆண்டு சில உடல்நலப் பிரச்சினைகள் முன்னதாக இருந்தன.
மார்ச் மாதத்தில் மூச்சுக்குழாய் அழற்சியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மற்றும் ஜூன் மாதம் குடலிறக்கத்திற்காக வயிற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



