யாழ். புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் முதன்மை சந்தேக நபரான சுவிஸ் குமாருக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்திற்காக முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் முன்னாள் உப காவல்துறை பரிசோதகர் ஸ்ரீகஜன் ஆகிய இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவிக்க உதவிய குற்றத்திற்காக அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திலிருந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட முன்னாள் உப காவல்துறை பரிசோதகர் ஸ்ரீகஜன் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றமையினால் அவரின்றியே அவருக்கு எதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
சந்தேகநபர்களான லலித் ஏ ஜெயசிங்க மற்றும் ஸ்ரீகஜன் ஆகியோர் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டமையால் இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.