அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள்.. 75,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதித்த அரசாங்கம்!

0
304

அர்ஜென்டினாவின் புதிய அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த மக்கள் மீது அந்த நாட்டு அரசாங்கம் அபராதம் விதித்துள்ளது.

கசப்பான நடவடிக்கை

ஆர்ப்பாட்டத்தின் போது பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக கூறி, அதற்கான செலவாக உள்ளூர் பண மதிப்பில் 60 மில்லியன் பெசோ (75,000 அமெரிக்க டொலர்கள்) தொகையை ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் புதிய ஜனாதிபதி ஜேவியர் மிலேயின் கொள்கைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் இந்த வாரம் புவெனஸ் அயர்ஸ் வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போதைய பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு கசப்பான நடவடிக்கை இதுவென குறிப்பிட்டு, ஜனாதிபதி மிலே புதிய திட்டங்களை அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளபடி பத்துக்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்கான பாதுகாப்புச் செலவுகளைச் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும், இந்த அமைப்புகளே மொத்த தொகையும் செலுத்த வேண்டும் என்றும், இதன்பொருட்டு மக்களை துன்புறுத்த கூடாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றே ஒருங்கிணைப்பாளர்கள் விமர்சித்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் குதித்த பொதுமக்கள்... மொத்தமாக பெருந்தொகை அபராதம் விதித்த அரசாங்கம் | Argentina Protest Security Costs Government Says

தனியார் துறை வளர்ச்சிக்கான சூழல்

மேலும், 1970 மற்றும் 1980களில் இருந்த சர்வாதிகாரத்தை இது நினைவூட்டுகிறது என்றும் விமர்சித்துள்ளனர். வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பொறுப்புக்கு வந்த ஜனாதிபதி மிலே, சீர்குலைக்கும் போராட்டங்களால் தனது திட்டங்களை முறியடிக்க முயற்சிக்கும் அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

மட்டுமின்றி, பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு கையளித்தார். பொதுமக்களுக்கான அரசின் செலவுகளையும் பெருமளவு குறைத்தார்.

இந்த நடவடிக்கைகளை அர்ஜென்டினா மக்கள் கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், துணிச்சலான நடவடிக்கை என சர்வதேச நாணய நிதியம் பாராட்டியுள்ளதுடன் நாட்டில் தனியார் துறை வளர்ச்சிக்கான சூழலை உருவாக்க உதவவும் தயார் என தெரிவித்துள்ளனர்.