யாழ்ப்பாணம் அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் நல்லூர் பிரதேச சபையின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரியாலை கிழக்கு பகுதியில் இன்று (08) புதன்கிழமை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் போராட்ட இடத்திற்கு வரவேண்டும் எனக் கோரி போராட்டக்காரர்கள் வீதியை மறித்தனர். இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் மயூரன் போராட்ட இடத்திற்கு வந்தார். இதன்போது மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
குறித்த பகுதியில் குப்பை கொட்டுவதற்கு வாகனங்கள் வந்தால் அவற்றுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு தாங்கள் பொறுப்பல்ல எனவும் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் தவிசாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பேரணியாகச் சென்று ஆளுநர் செயலகத்தில் மற்றொரு மகஜரைக் கையளித்தனர்.
உலகெங்கிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மக்கள் போராடி வரும் நிலையில் அரியாலை மக்களாகிய நாமும் எமது ஊரைப் பாதுகாப்பதற்காக நமது அழகிய ஊரின் நிலம், கடல், நீர்வளம், தூய காற்று போன்ற இயற்கையின் கொடைகளைக் காப்பாற்றுவதற்காகப் போராட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என மக்கள் ஆதங்கள் வெளியிட்டனர்.
நல்லூர் பிரதேச சபை, மக்களுடன் எவ்வித கலந்துரையாடலும் நடத்தாமல் சுற்றுச்சூழலை மாசுபடுத்தக்கூடிய குப்பைகளை தமது ஊரில் கொட்டும் திட்டத்தை ஆரம்பித்திருப்பது, எமது மக்களால் மட்டுமல்ல இயற்கையையும் மனிதத்தையும் நேசிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியெனவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இயற்கை வளங்கள் இன்றைய தலைமுறைக்கு மட்டுமானது அல்லவென சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள்
எதிர்கால சந்ததியினரிடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு தமது தலைமுறைக்கு உள்ளதெனவும் கூறுகின்றனர்.