ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கு பாகிஸ்தான் பாஸ்போர்ட் முடக்கம்

0
261

பாகிஸ்தான் தலிபான்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஆப்கானிய பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கடவுச்சீட்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் பாகிஸ்தானிலுள்ள ஆப்கானிய பிரஜைகள் பெற்று இருக்கும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையான கடவுச்சீட்டுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு பாகிஸ்தானில் தங்கியிருப்பதற்கான சட்டபூர்வ ஆவணங்களை கொண்டிராத ஆப்கானியரை திருப்பி அனுப்பும் நடவடிக்கையும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கடவுச்சீட்டு பெற்ற ஆப்கானியர்களில் ஒருவராக கருதப்படும் ஆப்கானிஸ்தானின் ஹக்கானி வலையமைப்பின் தலைவரும் தலிபான் அரசின் உள்துறை அமைச்சருமான சிராஜுத்தீன் ஹக்கானிக்கு கடவுச்சீட்டு வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சிந்து மாகாணத்தின் சுக்கூரில் இரண்டு அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆப்கான் பிரஜைகளுக்கு பாகிஸ்தான் கடவுச்சீட்டுகள் முடக்கம் | Pakistani Passports Frozen For Afghan Nationals

அவர்களில் ஒருவர் ஒய்வு பெற்றவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹக்கானி பாகிஸ்தான் கடவுச்சீட்டு வைத்திருப்பதாகவும் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதை ஆப்கானிய தலிபான் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

தலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்பிருந்தே அமெரிக்காவின் உலக பயங்கரவாதிகளின் பட்டியலில் ஹக்கானியின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனால் தாம் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் அவர் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்துக் கொண்டுள்ளார்.