ஏர் இந்தியா விமான விபத்து; பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்

0
104

இந்தியாவின் குஜராத் மாநிலம் அஹமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ பயணிகள் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்துள்ளனர். இந்த நிலையில் குஜராத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் “அஹமதாபாத்தில் ‘எயார் இந்தியா’ விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் கவலையளிக்கிறது.

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஷெபாஸ் ஷெரீப்பின் அண்ணனும், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள பதிவில், “அஹமதாபாத்தில் நடந்த துயரமான ‘எயார் இந்தியா’ விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இழப்பு எல்லைகளைக் கடந்து, நமது பொதுவான மனிதநேயத்தை நினைவூட்டுகிறது. பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியுமான பிலாவல் பூட்டோ-சர்தாரி வெளியிட்டுள்ள பதிவில் “இன்று அதிகாலை நடந்த ஒரு துயர சம்பவத்தைக் கேட்டு வருத்தமடைந்தேன்.

இந்தியாவின் அஹமதாபாத் அருகே 242 பயணிகளுடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ‘எயார் இந்தியா’ விமானம் விபத்திற்குள்ளானது. இந்திய மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.