தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரச்சாவை அறிவித்தவர்கள் இறுதி போரில் மக்களை சுட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியவர்களே என பொன் சுதன் தெரிவித்துள்ளார்
வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்தே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்து விட்டதாக கூறி அவருக்கான வீரச்சாவு அறிவித்தலை புலம்பெயர் தேசத்தில் உள்ள அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
இத்தனை வருடங்களாக அமைதியாக இருந்த இவர்களை தற்போது யார் தூண்டி விட்டது? இவர்களுக்கு தலைவர் இருக்கிறாரா? இல்லையா?என அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன?
இவர்கள் எல்லோரும் முன்னாள் போராளிகள் இல்லை. இவர்கள் கொண்ட கொள்கையை மறந்து இறுதி போரில் தாங்கள் தப்பிப்பதற்காக மக்களை சுட்டுவிட்டு சென்றவர்கள்.
தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக ஒன்று சேரும் போதெல்லாம் போலி அறிவிப்புக்களை வெளியிட்டு மக்களை திசை திருப்புகிறார்கள்.
இலக்கில் இருந்து அவர்களை அகற்றுகிறார்கள் இவர்கள் அனைவரும் இந்திய புலனாய்வுத்துறையான” றோ” அமைப்பின் நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குபவர்கள்.
இரண்டு அணிகளாக பிரிந்து போலி அறிவிப்புகளை செய்து மக்களை நம்பவைத்து பணம் சேர்க்கும் தந்திரத்தில் இதுபோன்ற புலம்பெயர் அமைப்புக்கள் சிலர் செயற்பட்டு வருகிறார்கள்.
ஒரு அணியினர் துவாரகா இருக்கிறார் என்றும், இன்னொரு அணியினர் தலைவர் பிரபாகரன் இல்லை என்றும் பிரச்சாரம் செய்து பணம் சேர்க்கிறார்கள். இந்த இரண்டு அணியினரும் ஒரே நிகழ்ச்சி நிரலின்கீழ் செயற்படுகிறவர்கள்.
முன்னாள் போராளிகள் என வெளி நாடுகளில் இருந்து இதுபோன்ற அறிக்கைகளை விடுபவர்கள் உண்மையான போராளிகள் இல்லை, உயிருக்கு பயந்து காக்க வேண்டிய மக்களை சுட்டுவிட்டு தப்பி ஓடியவர்கள்.
இவர்கள் தற்போது புலிகளின் பணத்தை சுருட்டியவர்களுடன் இணைந்து இவ்வாறான போலி அறிவிப்புக்களை விடுகின்றனர். இது தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும், இலங்கை தமிழர்களும் அவதானமாக இருப்பதுடன் இவர்களை எமது தேசிய ரீதியான பயணத்தில் இருந்து அகற்ற வேண்டுமெனவும் தெரிவித்தார்.