தவறு செய்திருந்தால் அதிகாரிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – அமைச்சர் ஹந்துன்நெத்தி

0
34

சுங்க சோதனை இல்லாமல் 323 கொள்கலன்களை விடுவித்ததில் எந்த அதிகாரியும் தவறு செய்திருந்தால், அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தை விசாரிக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்திருந்தார். இதன்போது உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

இந்தக் குழு தற்போதைய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது என்றும் மத்திய வங்கி சம்பவம் மற்றும் பிற சம்பவங்களைப் போல இந்த சம்பவத்தை மறைக்க எந்த முயற்சியும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்புடைய குழு அறிக்கையை சமர்ப்பித்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அது இன்னும் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்த பின்னர் முறையான நடைமுறையின்படி செயல்படுவேன் என்றும் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறினார்.

அறிக்கையை இன்னும் பார்க்கவில்லை என்றும் அமைச்சர் மேலும் கூறினார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் தாக்கல் செய்த அறிக்கை சரியாக இருந்தால் அது அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தப்படும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார்.