செயலிழந்திருந்த நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் உற்பத்தி இயந்திரங்களும் மீண்டும் இயங்கும் நிலைக்குத் திரும்பியுள்ளன.
அதன்படி தற்போது இரண்டு மின் பிறப்பாக்கிகள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் மற்றைய மின் பிறப்பாக்கியைும் மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என்றும் மின் உற்பத்தி நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 9 ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து நுரைச்சோலை மின் நிலையத்தின் பாதுகாப்பு அமைப்பு செயற்பட்டதால் அதன் 3 மின் பிறப்பாக்கிகளும் செயலிழந்தன.
இதன் விளைவாக தேசிய மின் கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் மின்சார திறன் இழப்பு ஏற்பட்டது. நிலைமையை நிர்வகிக்க இலங்கை மின்சார சபை நாடு முழுவதும் நேர அட்டவணைக்கு அமைய மின்சார விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்தது.
இருப்பினும் நேற்று காலைக்குள், நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டது. இதன் விளைவாக தினசரி மின் விநியோகத் துண்டிப்பு முடிவுக்கு வருவதாக வலுசக்தி அமைச்சு நேற்று (14) அறிவித்தது.
இந்நிலையில் செயலிழந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதல் மின் உற்பத்தி இயந்திரமும் நேற்று பிற்பகல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டதால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 600 மெகாவாட் மின்சார திறன் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.