சட்டவிரோத மதுபானத்துக்கு பதிலாக புதிய வகை மதுபானம்

0
3

நாட்டில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத மதுபானத்திற்கு பதிலாக சுகாதார பாதுகாப்பான முறையின் கீழ் புதிய வகை மதுபானத்தை தயாரித்து அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நடைபெற்ற நிதிக்குழு (COPF) கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இந்தக் கருத்தை தெரிவித்தனர்.

சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் குறைந்த விலையில் இதை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன்போது 85% ஆல்கஹாலுக்குப் பதிலாக மதுபானத்தில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இல்லாமல் சிறந்த தரமான மதுபானத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

ஆரம்பத்தில் 25% ஆல்கஹால் உள்ளடக்கத்தில் 180 மில்லிலீற்றர் மதுபானம் உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் இவை அனைத்தும் நிச்சயமாக சரிபார்க்கப்பட்டு பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளின்படி வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினர்.

பெலவத்தை மற்றும் செவனகல மதுபான தொழிற்சாலைகள் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்க முடியும் என்றும் இந்த மதுபானம் ஒரு நிலையான நிலைக்கு உற்பத்தி செய்யப்பட்டால் குறைந்தபட்சம் 50-100 பில்லியன் ரூபா வரி வருவாயைப் பெற முடியும் என்றும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.