முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஐந்தாம் நாள் அகழ்வாய்வுகள் இன்று (11.09.2023) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அகழ்வுபணிகள் தொடர்சியாக நடைபெற்று வருகின்றன.

தகவல்கள் மூடி மறைப்பு
மேலும், அகழ்வு பணியில் இடம்பெற்ற தவறுகளை சுட்டிக்காட்டியதன் பின்னணியில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்கள் அகழ்வுப்பணி காலையில் ஆரம்பிக்கும் போதும் மதிய உணவு நேர இடைவேளையிலும் மாலை நிறைவடையும் போதே அருகில் சென்று காணொளி, புகைப்படங்கள் எடுத்து செய்தி சேகரிக்க முடியும் எனவும் ஏனைய நேரங்களில் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை எனவும் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ கட்டுப்பாடு விதித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த அகழ்வு பணி பற்றிய வி்டயங்கள் ஏற்கனவே ஊடகங்களுக்கு மறைக்கப்பட்டு வரும் நிலையில் திடீரென இவ்வாறு ஊடகங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய கட்டுப்பாட்டினால் அகழ்வுப்பணியில் கிடைக்கப்பெற்ற தகவல்களை மூடி மறைப்பதற்கான செயற்பாடாகவே இருக்கின்றது என ஊடகவியலாளர்கள் சந்தேகம் வெளியிட்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






