நேபாளத்தில் போராட்டகாரர்களுக்கு பயந்து அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தொங்கிய அதிர்ச்சியூட்டும் காணொளி வைரலாகி வருகிறது.
அதில், மூத்த அரசு அதிகாரிகள் அவசரகால ஹெலிகாப்டரில் கட்டப்பட்ட கயிறுகளில் ஒட்டிக்கொண்டு ஆத்திரமடைந்த போராட்டக்காரர்களின் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சிப்பதைக் காட்டுகிறது.
ஹெலிகாப்டர் புறப்பட்டவுடன் கூட்டத்திலிருந்து தப்பிக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரில் தொங்கிய காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டக்காரர்களால் வேரூன்றிய ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள், கோபமடைந்த கூட்டத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அவசரமாக தப்பிச் சென்றனர்.

நேபாளத்தில் சமூக ஊடகங்களை அரசாங்கம் தடை செய்ததை எதிர்த்து அங்கு மக்கள் போராட்டம் வெடித்ததுடன் கலவரங்களும் இடம்பெற்றது.
ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதிராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால் பதற்றம் நீடித்து வருகிறது.
நேபாளத்தில் ‘ஜென் ஸீ’ இளைஞர்கள் நடத்திய தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. அவருடன் சேர்ந்து, நாட்டின் அதிபராக இருந்த ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார்.

நேபாளத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மேலும் நாட்டின் தலைநகர் காத்மாண்டு உட்பட பல்வேறு பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன.
ஊழல் அரசியல்வாதிகளின் வசிப்பிடங்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நேபாளத்தில் அமைதி திரும்பாத நிலையில் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இலங்கையிலும் 2022 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்த நிலையில் ராஜபக்க்ஷர்கள் ஆட்சியில் இருந்து மக்களால் விடட்டி அடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.