பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து நாடு தழுவிய ரீதியில் போராட்டம் நடத்தப்படும் என கானின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு, ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவர் பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களால் அவருக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

பண மோசடி
அவற்றை அவர் அரச கருவூலத்திற்கு ஒப்படைக்காமல் விற்பனை செய்து அந்த பணத்தை மோசடி செய்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போதே மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதுமாத்திரமல்லாமல் அவரை உடனடியாக கைது செய்யும் படி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கமைய இம்ரான் கான் லாகூரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (பிடிஐ) சார்பில் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தொண்டர்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் வரம்பிற்குள் அமைதியான வழியில் போராட்டங்களில் ஈடுபடும்படி கட்சித் தலைமை அறிவிப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கான் வெளியிட்ட காணொளி
இதனால் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி பகுதிகளில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்படுவதற்கு முன்னர் இம்ரான் கான் காணொளியொன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் கைது செய்யப்பட்டால் ஆதரவாளர்கள் யாரும் வீட்டில் அமைதியாக இருக்காமல், வெளியில் வந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனை அடுத்தே கட்சியினால் இந்த போராட்ட முடிவு வெளியிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.