நல்லூர் திருவிழா: யாழ் மண்ணில் முகாமிட்டுள்ள லைகா குழும ஊடகங்கள்

0
65

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கப்பட்டு வெகு விமர்சையாக இடம்பெற்று வரும் நிலையில் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

வேல் மூலவராகத் திகழும் திருத்தலம், ஆறுமுக நாவலரின் மனம் கவர்ந்த கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்கும் நல்லூர் கந்தன் ஆலய மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

தமிழர்களின் தனித்துவத்தையும் கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் உலக மக்களுக்கு உரத்துரைக்கும் ஒரு விழாவாகவே நல்லூர் கந்தன் ஆலய திருவிழா நோக்கப்படுகிறது.

கடந்த ஒன்பதாம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவின் 19ஆம் நாளான இன்று சூரியோட்சவம் வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது.

கடந்த 18ஆம் திகதி மாலை மஞ்சத் திருவிழாவும், 25ஆம் திகதி அருணகிரிநாதர் உற்சவமும், 26ஆம் திகதி மாலை கார்த்திகை உற்சவமும் வெகுச் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து நாளை காலை சந்தானகோபாலர் உற்சவமும், மாலை கைலாச வாகனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.

அத்துடன், 30ஆம் திகதி காலை தண்டாயுதபாணி உற்சவமும், 31ஆம் திகதி மாலை சப்பற உற்சவமும், செப்டெம்பர் முதலாம் திகதி காலை தேர்த் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து இரண்டாம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும், மாலை கொடியிறக்கமும், மூன்றாம் திகதி மாலை பூங்காவனத் திருவிழாவும், மறுநாள் வைரவர் உற்சவமும் நடைபெறவுள்ளன.

நல்லூர் திருவிழாவை காண புலம்பெயர் தேசங்களில் இருந்து பெருமளவான தமிழர்கள் யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில், நல்லூர் உற்சவத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளில் லைகா குழுமத்தின் ஊடக நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், ஆதவன் செய்தி இணையத்தளம், ஆதவன் ரிவி, ஆதவன் ரேடியோ, தமிழ் எப்.எம், ஒருவன் செய்திச் சேவை மற்றும் ஒருவன் ப்ளஸ் என்பன நல்லூரில் நேரடிக் கலையகம் அமைத்து பணிகளில் ஈடுபட்டுள்ளன.

நல்லூர் திருவிழாவை காணவரும் அடியவர்களை மேலும் கொண்டாட வைக்கும் வகையிலான செயற்பாடுகளையும், நல்லூர் உற்சவத்தின் சிறப்புகளை புலம்பெயர் தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளையும், லைகா குழுமத்தின் ஊடகங்கள் அங்கிருந்து நேரடியாக முன்னெடுத்துள்ளன.