சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி கொலை – அபுதாபியில் இருந்து அரங்கேற்றப்பட்ட திட்டம்

0
25

தலங்கம, அக்குரேகொடவில் ஒரு காரில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொல்லும் திட்டம் அபுதாபியில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் கும்பல் தலைவரான கரந்தெனியே சுத்தாவால் முழுமையாக திட்டமிடப்பட்டது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கரந்தெனியே சுத்தா இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களுடன் தொலைபேசியில் பேசி தாக்குதல் நடத்துவதற்கான வழிமுறைகளை தொடர்ந்து வழங்கி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

கரந்தெனியே சுத்தாவின் வழக்குகளுக்காக முன்னிலையாகி வந்த இந்த சட்டத்தரணி அண்மையில் சுத்தாவின் முக்கிய எதிரியான லொகு பாட்டிக்காகவும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக இந்தக் கொலை நடந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி இந்தத் தாக்குதல் நடந்த நாளில் (13 ஆம் திகதி) கடுவெல நீதிமன்றத்தில் லொகு பாட்டிக்காகவும் முன்னிலையாகியிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

நுகேகொட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இருவர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கரந்தெனிய சுத்தாவின் நெருங்கிய கூட்டாளிகள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சட்டத்தரணியை கொலை செய்ய T-56 மற்றும் கைத்துப்பாக்கி ஆயுதங்களை கொலையாளிகளுக்கு இந்த சந்தேக நபர்கள் வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது. கொலையைச் செய்த இரண்டு கொலையாளிகளையும், காரில் வந்த மற்ற இருவரையும் பொலிஸார் தற்போது அடையாளம் கண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு கொலையாளிகளும் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர்கள் என்று தகவல் கிடைத்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும், இந்தத் தாக்குதலுக்கு உதவுவதாக ஒப்புக்கொண்ட பணத்தில் எதையும் பெறவில்லை என்று விசாரணையின் போது கூறியுள்ளனர்.

13 ஆம் திகதி மாலை 5.00 மணியளவில், சட்டத்தரணியும் அவரது மனைவியும் அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ​​இரண்டு பாதாள உலகக் கொலையாளிகள், அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர்.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி மேற்பார்வையின் கீழ் 10 பொலிஸ் குழுக்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.