1991 இல் நடந்த கொலை: 33 ஆண்டுகளின் பின் ஜேர்மனியில் கைதான இலங்கையர்

0
146

1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை தொடர்பில் ஜேர்மனியில் கைது செய்யப்பட்ட இலங்கையர் தண்டனை அனுபவிப்பதற்காக ருமேனியா அழைத்துவரப்படவுள்ளார்.

எதிர்வரும் 23 ஆம் திகதி ஜேர்மனியில் இருந்து ருமேனியாவிற்கு குறித்த நபர் அழைத்துவரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1991 ஆம் ஆண்டு புக்கரெஸ்டில் நடந்த கொலைக்காக சர்வதேச அளவில் தேடப்பட்டு வந்த இலங்கையர் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜேர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டவர் ஒருவரை கொலை செய்து சடலத்தை ஏரி ஒன்றில் வீசியமைக்காக குற்றவாளிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனால் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் அவரை கைது செய்வதற்காக தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்த நபர் ஜேர்மனியில் இருப்பதாக தகவல் கிடைத்ததும் ருமேனிய பொலிஸார் ஜேர்மன் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஜனவரி மூன்றாம் திகதி கைது செய்தனர்.

இந்நிலையில் சிறை தண்டனை விதிக்கப்படுவதற்காக எதிர்வரும் 23 ஆம் திகதி ருமேனியா அழைத்து வரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குற்றவாளியான 53 வயதுடைய இலங்கையர் ருமேனியா அழைத்து வரப்பட்ட பின்னர் தண்டனையை அனுபவிக்க தனி சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.