நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட நிலநடுக்கம் மொராக்கோவின் மையப்பகுதியில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் உள்ள மரகேஷ் நகருக்கு அருகில் உள்ள ஆறு மாகாணங்களில் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மொராக்கோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.
மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை மிகுந்த வேதனையளிப்பதாக நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், “இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலாம் இணைப்பு
மத்திய மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக சுமார் 296 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்
இதேவேளை இந்த நிலநடுக்கத்தால் சுமார் 155 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் மராகேஷுக்கு தென்மேற்கே 71 கி.மீ. (44 மைல்) தொலைவில் உள்ள ஹை அட்லஸ் மலைகளில் 18.5 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.