அரண்மனை 4 படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. இதுவரை படம் பார்த்தவர்கள் அரண்மனை 4 பற்றிய தங்களது விமர்சனத்தை டுவிட்டரில் பதிவிட ஆரம்பித்திருக்கின்றனர். அதில் சில விமர்சனங்களை இதில் பார்க்கலாம்.
அரண்மனை 4 படத்தின் கதை
10 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிச்சென்று காதல் திருமணம் செய்து கொண்ட தங்கை தமன்னா தற்கொலை செய்து கொண்டதாக அண்ணன் சுந்தர்.சி.க்கு தகவல் கிடைக்கிறது. தங்கையின் கணவர் சந்தோஷ் பிரதாப்பும் நெஞ்சுவலியால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தங்கையின் வீட்டிற்கு செல்லும் அண்ணன் சுந்தர்.சி தனது தங்கையும், அவரது கணவரும் எப்படி இறந்தனர்? தனது தங்கை தங்கியிருந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்களின் பின்னணி என்ன? தனது தங்கை மகளை கொல்லத் துடிக்கும் பேய் யார்? அந்த பேயிடம் இருந்து தனது தங்கை மகளை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் கதை
நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லை
சுந்தர்.சி படங்கள் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்திலும் யோகி பாபு, வி.டி.வி. கணேஷ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், லொள்ளு சபா சேசு என்று பெரிய பட்டாளமே உள்ளது.
அதேபோல, இதுவரை தமன்னா நடித்த படங்களில் பெரும்பாலும் கவர்ச்சி நாயகியாகவே, கதாநாயகனை காதலிக்கும் பெண்ணாகவே உலா வந்தவருக்கு இந்த படத்தில் நல்ல அருமையான தாய் வேடம் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குழந்தைகளை காப்பாற்ற அவர் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டே போராடுவது படம் பார்ப்பவர்களை படத்துடன் ஒன்றவைத்தது.
தமன்னாதான் படத்தின் பலம் என்பதற்கு அந்த காட்சி உதாரணமாக அமைகிறது. ராஷி கண்ணாவிற்கு படத்தில் பெரிய வேலை இல்லை.
இறுதிக்காட்சியில் வழக்கமான சினிமா பாணியில் சுந்தர் சி தனது மனைவி குஷ்புவையும், சிம்ரனையும் ஆட வைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சி பாளையத்தம்மன், அம்மன் போன்ற சாமி படத்தை நமக்கு ஒரு நிமிடம் நினைவூட்டுகிறது.
இதற்கு முன்பு வந்த அரண்மனை படங்களில் பின்பற்றிய சில கவர்ச்சி, காதல், பிளாஷ்பேக் போன்ற விஷயங்களை இந்த படத்தில் சுந்தர்.சி தவிர்த்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இதுவரை வந்திருக்கும் டுவிட்டர் விமர்சனம் படத்துக்கு பலம் சேர்க்கக்கூடியதாகவே இருக்கிறது.
படம் பார்த்த பெரும்பாலானோர் சுந்தர்.சி சம்பவம் செய்துவிட்டார் என்றே கூறிவருகின்றனர். பார்க்கலாம் வசூலிலும் அரண்மனை 4 வேட்டையாடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.